விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி, ஏப். 2: ஆண்டிபட்டி நகரில் உள்ள தபால் அலுவலகம் முன்பு நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் பெருசு தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, நகர செயலாளர் முனீஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை செய்த அனைவருக்கும் நிலுவை தொகையை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி பாக்கி 4000 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.