6 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
பவானி, அக். 31: தமிழ்நாடு அரசு ஒரு கோடி பனை விதை விதைப்புத் திட்டம் 2025-ன் தொடர்ச்சியாக பவானி- அந்தியூர்- செல்லம்பாளையம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் 6 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பெருந்துறை கோட்டம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பவானி உட்கோட்டம், பவானி பிரிவு சார்பில் இரட்டை கரடில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் சேகர் தலைமை தாங்கினார்.
ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா பனைமர விதைகள் விதைக்கும் பணியை துவக்கி வைத்தார். பனைமரம் வளர்ப்போம், நிலத்தடி நீரை சேமிப்போம் என்பதற்கு இணங்க நெடுஞ்சாலை துறையின் மூலம் மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகளின் விளிம்பில் சாலை பணியாளர்களைக் கொண்டு பனை விதை விதைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உதவிப் பொறியாளர் த.பழனிவேலு, உதவியாளர்கள் திருமுருகன், மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
