கொடுமுடியில் நவராத்திரி கொலு பொம்மைகள் வழிபாடு
கொடுமுடி, செப்.30: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு, நேற்று 8-ம் நாள் பூஜைகள் நடைபெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, சக்தியின் அருள் பெருகும் நாளாக மதிக்கப்படுகிறது. விழா ஆரம்ப நாளில் (செப்.22ம் தேதி) கலசம் வைத்து, தெய்வங்களை அழைத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொலுவில் விநாயகர், கிருஷ்ணர், அம்மன், ஆழ்வார் நாயன்மார், முனிவர்கள், கிராம வாழ்க்கை, விலங்குகள் மற்றும் சமூக நிகழ்வுகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி கொலு விழாவினால், அறிவு, செல்வம், ஒற்றுமை, ஆன்மிகம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன என குருக்கள் கூறுகின்றனர். மாலை நேரங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நவராத்திரி கொலு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.