பதிவு தபால் சேவையை ரத்து செய்வதை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக. 30: ஓய்வூதியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு, மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு ஆகியன சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கன்வீனர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
இதில், தபால் துறையில் நடைமுறையில் உள்ள பதிவு அஞ்சல் சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள முடிவை கைவிட வேண்டும். தபால் துறையை சீரழிக்கும் வகையில் அதில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் மய நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில், அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க பொருளாளர் பழனிவேல் நன்றி கூறினார். இந்த, ஆர்ப்பாட்டத்தில், தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பன்னீர் செல்வம், பரமசிவம், மணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.