வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்
ஈரோடு, ஆக.27: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பிஆர்எஸ் சாலை அர்த்தநாரிபாளையத்தில் உள்ள சென்னிமலை இண்ட் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை லிமிடெட் ஆடிட்டோரியத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இஎஸ்ஐசியும் இணைந்து ‘நிதி ஆப்கே நிகட்’ (பிஎப் உங்கள் அருகில்) என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நாளை (28ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்த கூட்டமானது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம். மேலும், முந்தைய கூட்டங்களில் மனு அளித்து நிலுவையில் உள்ளவர்கள் அது குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.