நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ஈரோடு, நவ.22: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடந்த 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலை நிறுத்தம் தொடங்கிய நாளன்று, கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக 2வது கட்டமாக நேற்று ஈரோடு தாலுக அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் கௌரிசங்கர் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் சந்திரகுமார் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் நவமணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சேதுமாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும். பணிகளை முறைபடுத்திட வேண்டும்.
தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். புறஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும். நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த காத்திருப்பு போராட்டத்தில் திரளான நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.