பு.புளியம்பட்டி, பவானிசாகரில் ஆடு திருடர்கள் கைது: 27 ஆடுகள் பறிமுதல்
சத்தியமங்கலம், ஆக. 22: புஞ்சைபுளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரிய கள்ளிப்பட்டி, கோட்டைபுதூர், மல்லியம்பட்டி, பாச்சாமல்லனூர், புங்கம்பள்ளி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் திருடுபோனது. இதுதொடர்பாக விவசாயிகள் இரண்டு காவல் நிலையங்களிலும் புகார் அளித்துள்ளனர்.
ஆடு திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பகுதியில் உள்ள டேங்க்மேடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சத்தியமூர்த்தி (42), ரமேஷ்குமார் (23) ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய தோட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளை திருடி இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 27 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவர் மீது வழக்குப்பதிவு செய்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.