மாவட்டத்தில் லேசான மழை
ஈரோடு, நவ. 19: மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஈரோடு உள்பட மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்திருந்தது.
நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி ஈரோடு மாவட்டத்தில் பெய்திருந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ஈரோடு - 3.20, சென்னிமலை - 1.40, பவானி - 2.40, கவுந்தப்பாடி - 5.20, கோபி - 2.10, எலந்தக்குட்டை மேடு - 1, கொடிவேரி அணை - 2, குண்டேரிபள்ளம் அணை - 1 என மொத்தம் 18.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், நேற்று காலை முதல் ஈரோடு நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் முழுமையாக இன்றி வானம் இருண்ட நிலையிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான காலநிலை நிலவியது.