குட்கா, லாட்டரி, கஞ்சா விற்ற 8 பேர் கைது
ஈரோடு, நவ.18: ஈரோடு மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற, பவானி அடுத்த நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (55), ராமசிபாளையத்தை சேர்ந்த கந்தசாமி (41), ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.9,500 ரொக்கம், இருசக்கர வாகனம், விலையுர்ந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று குட்கா விற்ற, நம்பியூர் அடுத்த பழனிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கிரிராம் (42), கோபி அடுத்த நாயக்கன்காட்டை சேர்ந்த சையது முஸ்தபா (49), உத்தரபிரதேச மாநிலம் ஹன்டிகாவை சேர்ந்த முகமது அப்துல் (32), பெருந்தலையூரை சேர்ந்த வேலுமணியை (53), போலீசார் கைது செய்தனர். சிவகிரியில் கஞ்சா விற்ற, அதேப்பகுதியை சேர்ந்த அர்ஜூன் (22), அளுக்குளியை சேர்ந்த வேல்முருகன் (24), ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.