பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
ஈரோடு, அக். 18: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு நகரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு தாலுகா பகுதிகளில் மட்டும் 80 தற்காலிக பட்டாசு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அரசு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? போதிய இடைவெளிகள் உள்ளனவா? பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா நேற்று பட்டாசு கடைகளில் சோதனை மேற்கொண்டார்.
ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெருந்துறை ரோடு, முனிசிபல்காலனி, பஸ் நிலையம், சத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார், மேலும், பட்டாசுக்கடைகளின் உரிமையாளர்களிடம் உரிய விதிமுறைகள் பின்பற்றி, தகுந்த பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆயிவின்போது, ஈரோடு தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், தீயணைப்பு மற்றும் காவல் துறையினரும் உடனிருந்தனர்.