வாய்க்காலில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனம் பறிமுதல்
கோபி, செப். 18: கோபி அருகே உள்ள குருமந்தூரில் கீழ்பவானி வாய்க்காலில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கோபி அருகே உள்ள குருமந்தூரில் கீழ்பவானி பிரதான வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஊராட்சி கழிவுகள் கொட்டப்படுவதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்நிலையில், நேற்று வாய்க்காலில் கழிவுகளை கொட்டிய குருமந்தூர் ஊராட்சி மன்ற வாகனத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீர்வளத்துறை சார்பில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியும் தொடர்ந்து வாய்க்கால் மற்றும் வாய்க்கால் கரையிலும் குப்பைகளை கொட்டியதால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, நீர்வளத்துறை சார்பில் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கால்வாயில் குப்பை கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.