ஈரோட்டில் சமூகநீதி நாள் பேரணி
ஈரோடு, செப். 18: தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அவருடைய சிலைக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சமூகநீதி நாள் பேரணியும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், டாக்டர் அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சாதிக் தலைமையில், ஈரோட்டில் சமூக நீதிநாள் பேரணி நேற்று நடைபெற்றது. இப்பேரணியை, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
காந்திஜி ரோட்டிலுள்ள ஜவான் பவனில் துவங்கிய பேரணி, பன்னீர்செல்வம் பார்க்கில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து, அங்குள்ள பெரியார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திராவிடக்கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சண்முகம், சமூகநீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி, திராவிட விடுதலை கழகத்தின் நிர்வாகி ரத்தினசாமி, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக், சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவர் வடிவேல் ராமன் உள்ளிட்ட பலர் திரளானோர் கலந்துக்கொண்டனர்.