ஈரோட்டில் மிதமான மழை
ஈரோடு, செப். 17: வழி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஈரோடு நகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
மாலை 4 மணி அளவில் திடீரென வானம் இருண்டு, மேகங்கள் சூழந்து காணப்பட்டது. தொடர்ந்து பரவலாக லேசாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும், ஒரு சில இடங்களில் லேசான மழையாகவும் பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. குறிப்பாக ஈரோடு, பெருந்துறை ரோடு, திண்டல் உள்பட நகரப் பகுதிகளில் சற்று மிதமான மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. பொதுமக்களின் மாலை நேர இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் இரவு முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி, மாவட்டத்தில் நம்பியூரில் மட்டும் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.