ஆசனூரில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு
சத்தியமங்கலம், அக்.16: வடகிழக்கு பருவமழை துவங்குவதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள திம்பம் பஸ் ஸ்டாப்பில் தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சியை தாளவாடி தாசில்தார் மாரிமுத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஆசனூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்பது, தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிக்கான பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வனத்துறை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.