சிவகிரியிலிருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்லும் சப்பரங்கள்
மொடக்குறிச்சி, ஆக. 15: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 63 நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் சிலைகளை சப்பரங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஈரோடு மாவட்ட சிவநேயச்செல்வர்கள் பேரவையின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரங்களிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயார் செய்யப்பட்டது.
சப்பரங்களை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அனுப்பி வைக்கும் முன்பாக சிவகிரி ஆதீனம்பாலமுருக ஈசான சிவசமய பண்டித சுவாமிகள் தலைமையில் தில்லை நடராஜர் உடனமர் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சிவனடியார் திருக்கூட்டத்தினர், சிவநேயச்செல்வர்கள் பேரவை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தேவாரம் பாடியும், கைலாய வாத்தியங்களை இசைத்தும், சிவபூஜையில் கலந்து கொண்டனர். சிவபூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக பஞ்ச வாத்தியங்கள் முழங்க சப்பரங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.