ஈரோட்டில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவித்த போலீசார்
ஈரோடு, செப். 11: ஈரோட்டில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கி போலீசார் ஊக்குவித்தனர். ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் காவல் துறை, பொது நல அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக நேற்று ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அவர்களை கவுரவித்து பரிசு வழங்கும் நிகழ்வு நடந்தது.
இதில், ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், 36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், ஜேசிஐ மண்டல இயக்குநர் தீபக் ஆகியோர் பங்கேற்று அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களை கவுரவித்து பரிசுகள் வழங்கினர். மேலும், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், நம்பி ஆருரன், கிருபாசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.