உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கலைஞர் உரிமை தொகை கேட்டு 129 பேர் மனு
ஈரோடு,அக்.10: ஈரோடு மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு, 36வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் நாகரத்தினம் முகாமை துவங்கி வைத்து, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 13 அரசு துறையைச் சேர்ந்த, 43 சேவைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் இந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் இருந்து மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டது. இதில், கலைஞர் உரிமைத் தொகை கோரி 129 மனுக்கள் பெறப்பட்டது.
குறிப்பாக, 36வது வார்டு சாலையோர கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தள்ளுவண்டி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், உதவி ஆணையர் சுபாஷினி, கவுன்சிலர் புவனேஸ்வரி, மாநகராட்சி அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.