கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஈரோடு, ஆக. 6: விஜயவாடாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற, கேரளாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சமீப காலமாக, ஈரோடு வழியாக செல்லும் ரயில் மூலம் கஞ்சா கடத்தல் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று ஈரோடு வந்தது.
அதில், ரயில்வே ஆர்.பி.எப் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கழிப்பறை அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 4.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன், நசீப் ஆகியோர் என்பதும், விஜயவாடாவில் இருந்து விற்பனைக்காக ஈரோட்டிற்கு கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.