பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட செங்கோட்டையன்
சத்தியமங்கலம், அக். 4: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சத்தியமங்கலத்திற்கு வருகை தந்தபோது அவரது ஆதரவாளர்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்பிஎஸ் கார்னர் பகுதியில் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சென்ற செங்கோட்டையன் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
பின்னர் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வில் பங்கேற்ற செங்கோட்டையன், தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியபோது அவர் பேட்டி தர மறுத்து செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.