கஞ்சா, புகையிலை விற்றதாக பெண் உட்பட 5 பேர் கைது
ஈரோடு, அக். 4: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஈங்கூர் கூத்தம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சென்னிமலை போலீஸ் எஸ்ஐ.க்கள் சரவணன் மற்றும் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த சுமன்குமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் அமரகவி (48), ஆப்பக்கூடலில் செல்வன் (55), வெள்ளித்திருப்பூரில் முருகன் (59), மலையம்பாளையத்தில் முருகன் மனைவி தங்கம் (40) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.300 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.