மீன் வளம் பாதுகாக்க 4 லட்சம் மீன் குஞ்சுகள்
பவானி, நவ. 1: நாட்டின் மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பவானி, காவிரி ஆறுகளில் தலா 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. பவானி ஆற்றில் ஆப்பக்கூடல்- கவுந்தப்பாடி பாலம் பகுதியில் 2 லட்சம் மீன் குஞ்சுகள், காவிரி ஆற்றில் கூடுதுறை படித்துறையில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. ஈரோடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெய்லானி, பவானிசாகர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன் தலைமை தாங்கினர்.
பவானி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, கிராம நிர்வாக அலுவலர் கவியரசு முன்னிலை வகித்தனர். நாட்டு இனங்களான சேல் கெண்டை, ரோகு இன மீன் குஞ்சுகள் ஆறுகளில் விடப்பட்டன. இதன் மூலம் நாட்டு இன மீன்களை பாதுகாத்து, உற்பத்தியை அதிகரித்தல், குறைந்த விலையில் புரதச்சத்து மிகுந்த மீன் உணவு கிடைத்தல், உள்நாட்டு மீனவர்களின் வருவாயை உயர்த்துதல், பல்லுயிர் உற்பத்தியை பாதுகாத்தல், மீன்களின் வாழ்விட சிதைவை தடுத்தல், சுற்றுச்சூழல் அமைப்பை காத்தல் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கிறது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ராஜசேகர், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.