ஈரோட்டில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூலை 25: ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள மாவட்ட சுகதார அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், மாநில பிரதிநிதித்துவ பேரவையின் முடிவில், ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதிய முறைகளை கைவிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, சண்முகம், ஜெகதீஸ்வரி, தீபன் சக்கரவர்த்தி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.