ஆக.3ல் தீரன் சின்னமலை அரசு விழா: 630 போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு, ஆக.1: அறச்சலூர் ஓடாநிலையில் நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் 630 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள், நாளைய மறுதினம் (3ம் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எஸ்பி சுஜாதா தலைமையில் 2 ஏடிஎஸ்பி.க்கள், 6 டிஎஸ்பி.,க்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.க்கள் உட்பட 438 போலீசாரும், ஆயுதப்படை போலீசார் 85 பேர், ஊர்காவல் படையினர் 74 பேர் என மொத்தம் 630 பேர் நாளை (2ம் தேதி) மாலை முதல் 3ம் தேதி இரவு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு, 14 தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னிமலை தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.