காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு
ஈரோடு,ஜூலை25: ஆடி மாதம் அம்மன் கோயில்களில் வழிபாடு என்பது சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் ஆடி அமாவாசை நாளும் பக்தர்களின் வழிபாட்டுக்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷங்களை போக்குவதற்கும், அவர்களது ஆசியை பெறுவதற்கும் உகந்த நாள் என்பது நம்பிக்கை.
அதன் அடிப்படையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை, ஈரோடு காவிரி ஆற்றங்கரையில் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து,படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர். இதேபோல மாவட்டத்தின் முக்கிய பரிகார இடங்களான பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையிலும் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோல குலதெய்வ கோயில்கள் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.