லக்காபுரம் செண்பக மலையில் குமார சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்
மொடக்குறிச்சி, அக். 29: பிரசித்தி பெற்ற செண்பகமலை குமாரசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற குமாரசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியில்
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரத்தில் பிரசித்திபெற்ற செண்பகமலை திருகுமார சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கந்தசஷ்டி விழாவானது, கடந்த 22-ம் தேதி காலை கோபூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் குமார சுப்பிரமணியர் உற்சவர் யாகசாலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கொடி ஏற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று விழாவின் இறுதி நிகழ்வான குமாரசுப்பிரமணிசாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.