விசைத்தறி கணக்கெடுப்பு, இ-மார்க்கெட் செயலி திட்டம் தொடங்க வேண்டும்
ஈரோடு, நவ. 28: விசைத்தறி கணக்கெடுப்பு மற்றும் இ மார்க்கெட் செயலி திட்டத்தை விரைவில் தொடங்க கோரி தமிழ்நாடு முதல்வரிடம் நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது, அவரிடம் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பாளர்கள் ஜெகநாதன், ரமேஷ், கந்தவேல் ஆகியோர் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இலவச வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் பள்ளி சீருடை உற்பத்தி செய்யும் விசைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு இந்தாண்டு கூலி உயர்வு வழங்கியதற்கும், ரூ.50 கோடி மதிப்பில் முதற்கட்டமாக, 2 ஆயிரம் சாதா விசைத்தறிகளை, நாடா இல்லா விசைத்தறிகளாக மாற்ற, ரூ.15 கோடி மானியமும், பழைய ரேப்பியர் தறிகளை மாற்றி புதிய ரேப்பியர் தறியாக்க நெசவாளர்களுக்கு, ரூ.15 கோடி மானியம், புதிய தானியங்கி தறிகளை கொள்முதல் செய்ய, ரூ.15 கோடி மானியம் மற்றும் சிஎப்சி அமைக்க ரூ.5 கோடி மானியமும் வழங்கி, ஜவுளித்துறை நெசவாளர்களின் வாழ்வில் நாட்டில் முதல் முறையாக மேம்படுத்த திட்டத்தை உருவாக்கி கொடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு எங்களது கூட்டமைப்பில் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுக்கு, 4 செட் இலவச பள்ளி சீருடை வழங்குகிறது. இதன்மூலம், ஆண்டுக்கு, 4 முதல் 6 மாதங்கள் வரை விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், இத்திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இலவச சீருடை உற்பத்தியில், விசைத்தறியில் காஸ்மட் எனப்படும் ரகம் மட்டும் 66 லட்சம் மீட்டர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், கைத்தறி மற்றும் பெடல் தறி, விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை டிரில், செர்ட்டிங் துணி வகைகள் தானியங்கி தறியில் நெசவு செய்யப்படுகிறது. ஆட்டோ லூம்களில் உற்பத்தி செய்யப்படும், 3.14 கோடி மீட்டர் சீருடை துணியை, வரும் ஆண்டு முதல் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் வகையில், ஸ்ட்ரைப் வடிவில் மாற்றம் செய்து வழங்க வேண்டும். இதன் மூலம் மேலும் 6 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல லட்சம் நெசவாளர்கள் நிரந்தர வேலைவாய்ப்பு பெறுவார்கள். விசைத்தறி கணக்கெடுப்பு, இமார்க்கெட் செயலி திட்டத்தை விரைவில் துவங்க வேண்டும். இதன் மூலம் விசைத்தறிகள், விசைத்தறியாளர்கள் மேம்பட வாய்ப்பும், திட்டங்களும் உருவாகும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.