மாநகராட்சியில் வார்டு சிறப்புக்கூட்டம்: மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
ஈரோடு, அக். 28: பொதுமக்களின் குறைகளுக்கு உடடினயாக தீர்வுகாண வேண்டும் என ஈரோடு மாநகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டெம் பார்கில் வார்டு சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேயரும் 50வது வார்டு கவுன்சிலருமான நாகரத்தினம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதன்பின், அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அன்றைய தினமே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சோலார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.