காதல் திருமணம் செய்த ஜோடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்
சென்னிமலை, ஆக. 19: காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீ்ஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (25). பிஏ பட்டதாரி. அதேபோல், முகாசிபிடாரியூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (19). பிஎஸ்சி பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து, ஹேமலதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஹேமலதா நேற்று வீட்டை விட்டு வெளியேறி, மோகனசுந்தரத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னிமலை போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.