தாளவாடி அருகே கரும்பு கரணை பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
சத்தியமங்கலம், ஆக.18: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாயத் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று தாளவாடி மலை பகுதியில் கரும்பு நடவு செய்வதற்கு தேவையான கரும்பு கரணை பாரம் ஏற்றிய லாரி தாளவாடியில் இருந்து கும்டாபுரம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கும்டாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இருப்பினும், லாரியில் இருந்த கரும்பு கரணைகள் முழுவதும் கீழே சிதறி சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.