கீழ்பவானி பாசன பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு
ஈரோடு, செப்.14: தமிழ்நாட்டில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும் மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 7 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் உற்பத்தியாகும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 2015ல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016ல் 2,966 ஹெக்டேராக குறைந்தது. இதன் பின்னர் 2017ல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018ல் 5,625 ஹெக்டேராகவும், 2019ல் 4,319 ஹெக்டேராகவும், 2020, 2021, 2022 வரை சுமார் 3,500 முதல் 4,000 ஹெக்டேர் வரையும் சாகுபடி செய்யப்பட்டது. 2023ல் 2,000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி குறைந்தது. மஞ்சள் விலை வீழ்ச்சியே மஞ்சள் சாகுபடி குறைவுக்கு காரணமாக உள்ளது. தொடர்ந்து 12 ஆண்டுகளாக மஞ்சள் சராசரியாக குவிண்டால் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை தான் விலை போனது. இதனால், விவசாயிகள் சாகுபடி செலவை கூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், மஞ்சள் சாகுபடியும் 25 சதவீதம் அளவுக்கு குறைந்தது.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.24,000 வரை விற்பனையானது. பிறகு படிப்படியாக குறைந்து ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை விற்பனையாகிறது. மஞ்சள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.10,000க்கும் குறையாமல் உள்ளதால் மஞ்சள் நடவில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி பாசனப் பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தற்போது, சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிர்கள் செழித்து வளர்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, பருத்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. முக்கியமாக, மஞ்சள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கீழ்பவானி பாசன பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு முதல் மஞ்சளுக்கு உரிய விலை கிடைப்பதாலும், தற்போது அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.