வெள்ளகோவில்-சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை ரூ.48 கோடியில் அகலப்படுத்தும் பணி தீவிரம்
மொடக்குறிச்சி, செப்.14: வெள்ளகோவில் - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னியம்பாளையம் முதல் நொய்யல் ஆற்று பாலம் வரை ரூ.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் ரோடு மாநில நெடுஞ்சாலை ரோடாக இருந்தது. வெள்ளகோவில் செல்லும் ரோட்டில் மொடக்குறிச்சி, எழுமாத்தூர், எல்லக்கடை, விளக்கேத்தி, முத்தூர், மாந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ஊர்கள் உள்ளது. மேலும், வெள்ளகோவில் செல்லும் ரோட்டின் வழியாக ஏராளமான பேருந்துகள் மற்றும் லாரி, கனரக வாகனங்கள், கார் போன்றவைகள் அதிகளவில் சென்று வருகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. இவ்வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் அதிகளவில் செல்கிறது.
இதனையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலையாக இருந்த வெள்ளகோவில் ரோட்டை வெள்ளகோவில் - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளகோவில் ரோட்டை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெள்ளகோவில் இருந்து நொய்யல் ஆறு வரை 7 மீட்டர் கொண்ட சாலையை 10 மீட்டராக அகலப்படுத்தி சாலை அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் முதல் நொய்யல் ஆற்று பாலம் வரை உள்ள வெள்ளகோவில் ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக அகலப்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம், ஆண்டு திட்ட நிதியின் கீழ் ரூ.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சின்னியம்பாளையத்தில் இருந்து நொய்யல் ஆற்று பாலம் வரை சாலையின் இடையில் 24 சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையின் ஓரத்தில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் 10 மீட்டர் அகலப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்காக சாலையில் அகலப்படுத்தப்படும் இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. மேலும் கடைகள் மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளில் சென்று வருவதற்காக ஜல்லிகள் கொட்டி பாதை அமைத்து தந்து வருகின்றனர். அதேபோல் சாலையின் ஓரத்தில் கீழ் செல்லும் குடிநீர் குழாய், வயர்களை கண்டறிற்கு அதனை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 2026 மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவு பெற்றால் வெள்ளகோவில் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இருக்கும்.