2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்
ஈரோடு, டிச.12: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.
பெங்களூருவை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் என்ஜினியர்கள் அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் பணியை மேற்கொள்ள உள்ளனர். முதல் நிலை சரிபார்ப்பு பணியில் 5 ஆயிரத்து 777 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 ஆயிரத்து 582 கட்டுப்பாட்டு கருவிகள், 3 ஆயிரத்து 627 வி.வி.பேட் கருவிகள் எடுத்து கொள்ளப்படும் என்றும், இந்த பணிகள் சுமார் ஒரு மாதத்தில் நிறைவுபெறும் என்றும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.