கோட்டை பெருமாளுக்கு பக்தர்கள் சீர் வரிசை
ஈரோடு, அக். 12: ஈரோட்டில் கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு பக்தர்கள் சீர் வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டு சென்றனர். ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படும். இதில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத 4வது சனிக்கிழமை அன்று பெருமாளின் சகோதரியான பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து பெருமாளுக்கு பக்தர்கள் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்து படைத்து வழிபடுவது வழக்கம்.
இதேபோல், 17ம் ஆண்டு சீர் விழாவாக நேற்று இரவு பக்தர்கள் பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து இனிப்பு, பழங்கள், ஆபரணங்கள், உடை, பூ உள்ளிட்டவைகளை 200க்கும் மேற்பட்ட தட்டுகளில் வைத்து சீர்வரிசையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, கஸ்தூரி அரங்கநாதர் கோயிலுக்கு வந்து மூலவருக்கு படைத்து வழிபட்டனர். இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.