மாவட்டத்தில் டெட் தேர்வை 41 மையங்களில் 13,660 பேர் எழுதுகின்றனர்
ஈரோடு, நவ.11: ஈரோடு மாவட்டத்தில் டெட் தேர்வு வருகிற 15ம் தேதி மற்றும் 16ம் தேதி இரண்டு நாட்களில் 41 மையங்களில் 13,660 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதில், நடப்பாண்டுக்கான டெட் தேர்வு மாநிலம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி, வருகிற 15ம் தேதி முதல் தாள், 16ம் தேதி இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்கிறது. இதில், 15ம் தேதி நடக்கும் முதல் தாள் தேர்வானது ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 66 மாற்றுத்திறனாளிகள் உட்பட 3,279 பேர் எழுத உள்ளனர்.
இதில், 5 பேர் ஸ்கிரைப் (சொல்வதை எழுதுபவர்) மூலம் எழுதுகின்றன். 16ம் தேதி நடக்கும் இரண்டாம் தாள் தேர்வு 38 மையங்களில் 117 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,381 பேர் எழுத உள்ளனர். இதில், 18 பேர் ஸ்கிரைப் உதவியுடன் எழுதுகின்றனர். மொத்தம் 2 நாட்களிலும் சேர்த்து 41 மையங்களில் 13,660 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஸ்கிரைப் மூலம் எழுதுபவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். இந்த தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பு அறையில் வைப்பது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மான்விழி நேற்று கட்டுகாப்பு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.