திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
ஈரோடு, ஆக. 5: ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் நடக்கும் திருப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி திண்டல் வேலாயுதசாமி கோயிலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக 5 நிலை ராஜகோபுரத்துடன், மலைக்கு செல்லும் படிகட்டுகள் கட்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டர் கந்தசாமி, எம்எல்ஏ சந்திரகுமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.