ஓணம் பண்டிகை எதிரொலி: ஜவுளிச்சந்தையில் விற்பனை அதிகரிப்பு
ஈரோசு, செப்.3: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டிவிஎஸ் வீதி,ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜர் வீதி,பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி,செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச்சந்தை நடைபெற்று வருகிறது. தவிர ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு வெளி மாவட்டம்,வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து,ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.அதேபோல அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களின் வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.நாளைமறுநாள் (5ம் தேதி) கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதை முன்னிட்டு ஜவுளி கொள்முதல் செய்ய கேரள மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஓணம் கொண்டாட்டத்துக்கென பிரதேயகமாக வடிவமைக்கப்பட்ட வேட்டி, சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக செட் சேலைகள் எனப்படும் சேலைகளை 10 எண்ணிக்கை கொண்டவை ரூ.3,800 வரை விற்பனையானது. ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு விற்பனை அதிகரித்து காணப்பட்டது.