சென்னிமலை முருகன் கோயிலுக்கு 5ம் தேதி முதல் வாகனங்கள் செல்ல தடை
ஈரோடு, செப்.2: சென்னிமலை முருகன் கோயில் மலைப்பாதையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், வரும் 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை வாகனங்கள் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு,4 கி.மீ தூரம் மலைப்பாதையும், 1,320 படிக்கட்டு வசதிகளும் உள்ளது. மலைப்பாதை சேதமடைந்து காணப்பட்டதால், அச்சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் பேரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மலைப்பாதையை அகலப்படுத்தி, தார் சாலை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முழுப்பணிகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க, கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்காக,மலைப்பாதையில் வரும் 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை வாகனங்கள் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு பலகையை, கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.