மீனவர் பிரச்னையில் அரசியல் சுய ஆதாயம் தேடுபவர்களை நம்ப வேண்டாம்
அந்தியூர், செப். 2: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்கும் பிரச்னையில், அரசியல் ஆதாயத்துக்காக மீனவர்களை சிலர் தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்குவதாக அந்தியூர் எம்எல்ஏ, ஏ.ஜி. வெங்கடாசலம் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அந்தியூர் எம்எல்ஏ.,வெங்கடாசலம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2017ல், வரட்டுப்பள்ளம் அணை மீன்படி உரிமத்தை தனியாருக்கு ஏலம் விட அப்போதைய அதிமுக அரசு முனைந்தபோது, சிபிஎம் உடன் இணைந்து திமுக வழக்கு நடத்தி, மீனவ சங்கத்துக்கு உரிமத்தை பெற்று கொடுத்தது.
இப்பிரச்னையில் மீன்வளத்துறை, வீட்டுவசதித்துறை அமைச்சர்களிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, கலெக்டர் வழியாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, பெஸ்த்தவர் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தெரியும். விரைவில் மீன்பிடி உரிமை வழங்கவுள்ளதை அறிந்த சிலர், அரசியல் சுய லாபத்துக்காக கருப்புக்கொடி ஏற்றவும், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என மீனவர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், மதிப்பு குறைவான நோக்கத்தில் போராட்டங்களை அறிவித்து அந்தியூர் மீனவர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். எந்த வகையான திசை திருப்புதலுக்கும் ஆளாகாமல், வாழ்வாதார கோரிக்கையை வென்றெடுக்க அரசுடன் சேர்ந்து நிற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.