கும்பகோணம் அருகே சுவாமிநாத கோயில் சன்னதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்பகோணம், ஜூலை 9: கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சன்னதி மற்றும் திருமஞ்சன வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான உமாதேவி உத்தரவிட்டார். இதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சன்னதி தெருவில் சாலையை ஆக்கிரமித்து வல்லப கணபதியை மறைக்கும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் பூக்கடை, இளநீர் கடை மற்றும் பொம்மைக்கடை இருந்ததை அகற்றக்கோரி 3 நாட்களுக்கு முன்பு நேரடியாக தெரிவித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பேரூராட்சி நிர்வாகம் மூலம் செயல் அலுவலர் சரவணவேல் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும், தொடர்ந்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காவல்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்பதையும், வணிகர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.