திருச்சியில் பயங்கரம் கழுத்தறுத்து மூதாட்டி படுகொலை
திருச்சி, ஜூலை 16: திருச்சியில் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குளத்துபட்டி கோமங்களத்தை சேர்ந்த ராமர் மனைவி பச்சையம்மாள் (65). திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் காலிமனை ஒன்றில் பாதுகாவலராக தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை இங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கத்தியால் பச்சையம்மாள் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதில் படுகாயமடைந்த பச்சையம்மாள், அலறியடித்தவாறு துணி ஒன்றை கழுத்தில் சுற்றி கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு உதவி கேட்டு ஓடிவந்தார். இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார். இது குறித்து எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.