நமணசமுத்திரம் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த விவகாரம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
திருமயம்: திருமயம் அருகே பள்ளி மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் அருகே தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உதவி ஆசிரியராக தினேஷ் ராஜா 11 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலா ராணி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள், கழிவறை சுத்தம் செய்யும் பெண்மணி, காலை உணவு திட்டத்தில் சமைக்கும் பெண்மணி உள்ளிட்டவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும், இந்த விசாரணையில் நமணசமுத்திரம் குடியிருப்பு தொடக்கப்பள்ளியில் கழிவறை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட மாற்று திறனாளி பெண்மணி ராணி என்பவர் கழிவறைக்கு தண்ணீர் ஊற்ற மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது அம்பலமாகியுள்ளது. மேலும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் காலை உணவு சமைக்கும் வீரம்மாள் என்ற பெண்மணிக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில் தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக காலை 8:30 மணிக்கு மாணவர்கள் வழக்கம்போல் கழிவறையை சுத்தம் செய்யும் போது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், இதை சமையலர் வீரம்மாள் ஒத்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது.
மேலும், இந்த விசாரணை நிறைவு பெற்ற நிலையில் விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து தெரிவிப்பார். அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கலா ராணி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட பள்ளியில் 18 ஆண்டு காலமாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கலாவை பணியிடை நீக்கம் செய்தும், உதவி ஆசிரியராக பணிபுரிந்து வரும் தினேஷ் ராஜாவை பணியிட மாறுதல் செய்தும் மாவட்ட கல்வி அலுவலர் கலா ராணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.