போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
குன்னூர், பிப். 14: நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், குன்னூர் வருவாய்துறை ஏற்பாட்டில் சாராயம், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பெட்போர்டு பகுதியில் வட்டாச்சியர் ஜவஹர், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை வழியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தடைந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
அதன்பின், தீயணைப்பு நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு வட்டாட்சியர் சில அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக ‘மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. போதைப்பொருள் எங்கேயாவது விற்றால் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்கள் பேரணிக்கு பின் போதைப்பொருட்களுக்கு அடிமையாக கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.