வால்பாறை இளம்பெண்ணுக்கு டாக்டர் டார்ச்சர்
கோவை, ஜூலை 8: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 40 வயதான, வால்பாறையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர், பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் சோதனை செய்த போது மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண், ‘‘எனக்கு டாக்டர் ஒருவர் டார்ச்சர் செய்கிறார். அவருக்கு 52 வயசு. 20 வருஷமா என் பின்னால் தொடர்ந்து வர்றார். நான் இப்போது வரும்போதுகூட என் பின்னால் வந்தார். அவரை பற்றி நான் போலீசில் புகார் தந்தேன். போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நபரை போலீசார் இவ்வளவு ஆண்டு ஆகியும் கண்டுபிடிக்க முடியாதா? அவரால் எனக்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது’’ என்றார்.
மேலும், ‘’நான் கலெக்டரிடம் புகார் கொடுத்து, சாகப்போகிறேன் என்னை தடுக்க வேண்டாம்’’ எனக்கூறி புலம்பினார். டாக்டர் ஒருவரின் போட்டோவை பேஸ்புக்கில் இருந்து எடுத்து அந்த போட்டோவை பிரிண்ட் போட்டு பேப்பரில் ஓட்டிருந்தார். அதை பேனர் போல் வைத்து போலீசாரிடம் முறையிட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவருக்கு மனநிலை மாற்றம் இருப்பதாக தெரியவந்தது. நீண்ட காலமாக அவர் இல்லாத விஷயத்தை இருப்பதுபோல் கற்பனை செய்து இருக்கலாம் என தெரிகிறது. அவர் ஒரு காலத்தில் மருத்துவமனையில் பணியாற்றியபோது அதை நினைத்து ஏதேதோ பேசியிருக்கலாம் என போலீசார் கூறினர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அனுப்பி வைத்தனர்.