மின்கம்பியாள் உதவியாளருக்கு தகுதி தேர்வு
திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல் அரசு ஐடிஐயில் டிசம்பர் 2025ம் ஆண்டுக்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள அரசு ஐடிஐயில் டிசம்பர் 2025ம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது அரசு ஐடிஐயில் படிவத்தினை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு குறைந்தபட்ச வயது 21 (அதிகபட்ச வயது வரம்பு இல்லை), மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டு குறையாமல் செய்முறை அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பதாரர் கையொப்பமிட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்: 2, பிறப்பு சான்றிதழ் நகல், பணி அனுபவ சான்றிதழ், விண்ணப்பதாரர் தேர்வு கட்டணம் ரூ.200 கருவூலகத்தில் செலுத்தி அதற்கான செலுத்து சீட்டின் அசல் உரிய படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.