நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல், நவ. 22: திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வினோத் பாலு தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் காஞ்சி குமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் விக்னேஷ் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, முன்னாள் அரசு ஊழியர் சங்க நிர்வாகி சின்னத்துரை வாழ்த்துரை வழங்கினர்.
இதில், நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.