மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா
திண்டுக்கல் நவ 21: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் முப்பெரும் விழா மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றது. 58வது தேசிய நூலக வார விழா, குழந்தைகள் தின விழா, பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா மைய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முதல் நிலை நூலகர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆசிரியர் கவிஞர் குழந்தை ராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் மாநிலச் செயலாளர் ஜெயசீலன், வாசகர் வட்ட பொருளாளர் அனந்தராமன், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்பு அதிகாரி கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாசகர் வட்ட தலைவர் லாசர் வேளாங்கண்ணி பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நிலை நூலகர் சுகுமார் நன்றி கூறினார்.