ஆத்தூர் வீரசிக்கம்பட்டியில் 30 மனுக்களுக்கு உடனடி தீர்வு
நிலக்கோட்டை, செப். 19: ஆத்தூர் ஒன்றியம் போடிகாமன்வாடி ஊராட்சி வீரசிக்கம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் முத்துமுருகன், தனி தாசில்தார் தனுஷ்கோடி முன்னிலை வைகித்தனர். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றார். இம்முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அதற்கான சான்றிதழ்களை பயனாளிகளிடம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி சசிகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சசிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.