ஆத்தூர் அக்கரைப்பட்டியில் இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் ஆய்வு
நிலக்கோட்டை, செப். 13: ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் சுமார் 11.52 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தை பயன்படுத்தி யாரும் குடியேறவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. தற்போது அந்த நிலத்தினை ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அந்த நிலத்தினை சுத்தப்படுத்தி சாலைகள் அமைத்து ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கும், தகுதி அடிப்படையில் புதிய நபர்களுக்கும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகவும், விரைவில் இலவச வீட்டு மனை பட்டாவினை ஏற்கனவே பெற்றவர்கள் மற்றும் புதிய நபர்களுக்கு விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலங்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.