குடிநீர் கேட்டு மறியல் வடமதுரை அருகே பரபரப்பு
வடமதுரை செப். 10: வடமதுரை அருகே சுக்காம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எஸ்.புதுப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராமமக்கள் காலி குடங்களுடன் கடவூர்-அய்யலூர் நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின்பே கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.