மாநில மல்யுத்த போட்டி பழநி மாணவிகள் பதக்கங்களை அள்ளினர்
பழநி, ஆக. 9: சேலத்தில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வயது, எடையின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 59 கிலோ எடை பிரிவில் பழநியை சேர்ந்த மாணவி தீபாலட்சுமி, 68 கிலோ எடை பிரிவில் மாணவி சந்தியா தங்கப்பதக்கம் பெற்றனர்.
62 கிலோ எடை பிரிவில் மாணவி நாகவல்லி வெள்ளிப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகள் ஜர்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பழநி டிஎஸ்பி தனஞ்ஜெயன், மல்யுத்த அமெச்சூர் சங்க மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன், அகாடமி தலைவர் அயூப்கான் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.